இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர்

லங்கையின்  பாராளுமன்றத் தேர்தலுக்கான மேடைப்பரப்புரைகள் , பிரச்சாரங்கள் சட்ட ரீதியாக முடிவுக்கு வந்த பின், வாக்களிப்பிற்கு ஒரே ஒரு நாளே எஞ்சியிருக்கும் இந்த தருணத்தில் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான காரணத்தினை முதலில் சொல்லி விடுவது முக்கியம்.  தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் கட்சிகளின் உறுப்பினர்கள் , அவற்றின்   தீவிர ஆதரவாளர்களுக்கு நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்தந்த கட்சித் தலைமைகளின் முடிவுக்கு  ஏற்பவும், அவர்களது நிலைப்பாடுகளை  சரியெனெ வாதிடுவதிலும்தான் அவர்கள் இப்போது கண்ணாக இருப்பார்களே தவிர, ஒரு பொது நிலைப்பாட்டு சிந்தனை அணுகுமுறைக்கு அவர்கள் தயாராக இருக்கமாட்டார்கள்.

ஆனால் கணிசமான வாக்காளர்கள்  நாம் முன்னே சொன்ன கட்சிகளின் உறுப்பினர்கள் , அவற்றின்   தீவிர ஆதரவாளர்களாக இருப்பதில்லை. இந்த கணிசமான , பொது நிலைப்பட்ட, கட்சிகளுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள், அதன் சிவில் சமூக பங்காற்றுனர்களுடனேயே இன்றைய  இலங்கையின் அரசியல் சூழல், அதில் இடம்பெறக் காத்திருக்கும்  ஆபத்தான நிலைமைகள்  பற்றி , உரையாடுவதற்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. அந்த மக்கள் பிரிவினரை நோக்கியே இந்தக் குறிப்புகள் எழுதப்படுகிறது.

தமிழ், முஸ்லிம், மலையக மக்களை   நோக்கியும் , இந்த மக்கள்  பிரிவிலுள்ள நாம் மேற்சொன்ன  தீவிர கட்சி ஆதரவாளர்களாக இல்லாதவர்கள் இந்த தேர்தலில் எடுக்கப் போகின்ற முடிவு மிக முக்கியமானது. இது அடிப்படையில்  இந்த தேர்தலில் யார்  வெற்றி பெறுவார் ,  யார் தோல்வி அடைவார் என்பதற்கும் அப்பாலான இலங்கையின் எதிர்காலம் தொடர்பானதாகவும், இலங்கை என்பது அனைத்து மக்களுக்குமான , அனைத்து இனங்களுக்குமான , சமத்துவ வாழ்வையும், நல்லிணக்கமிக்கதும், பன்மைத்துவமானதுமான பல்லினங்கள் , பல்காலாசாரங்கள் கூட்டாக இணைந்து வாழக்கூடிய நாடாக இருக்கப் போவதை முதலில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையை இப்போது, இந்த தேர்தலில்  உறுதி செய்வதும், இந்த அடிப்படைகளை சிதைத்து மேலாதிக்க அதிகாரத்தினை உறுதிப்படுத்த எடுக்கப்படும் , அரசியல் முன்னெடுப்புகளுக்கு   மறுத்தானாகவும் , உறுதியான அரசியல் நிலைப்பட்ட , ஜனநாயக விழுமியங்களை கட்டிக் காக்க தமது வாக்கினை வழங்க வேண்டியதுமே  இப்போது  மிக முக்கியமாகும்.

இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன .  ஒன்று , ஒட்டு மொத்த இலங்கையின் எதிர்காலம், இரண்டாவது இலங்கைக்குள் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் இருப்பும் வாழ்வும்.

இலங்கையின் எதிர்காலம் என்பது,  அடிப்படை ஜனநாயக விழுமியங்களை கட்டிக்காப்பதுடன் , இந்த நாடு பல்லினங்கள், பல்கலாசார விழுமியங்களுடன் , இன ,மத நல்லிணக்கத்துடன், மக்களிடையே பேதங்களை உருவாக்காத , அனைத்து மக்களினதும் , அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார உரிமைகளை பேணி காப்பதில்தான் தங்கி இருக்கும். .

 இரண்டாவது, இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை   பொறுத்தவரை அவர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் நீதி செய்வதாகவும், அவர்கள் தம்மை இலங்கையர்களாக ,  தாம் சமமாக நடாத்தப்படும் மக்கள்  பிரிவினராக உணர்வதை மெய்ப்படுத்துவதுமாக இருக்க வேண்டும்.

மேற்சொன்ன இரண்டும் அடிப்படையில் ஜனநாயகம், மக்கள் உரிமைகள், பண்பாட்டு, பொருளாதார பாதுகாப்புகள் என்கிற கருதுகோள்களில்தான் தங்கி உள்ளன. இவற்றினை பாதுகாக்கின்ற பொறுப்பும் , கடமையும் சட்டம், நீதித்துறை, ஊடகங்களுக்கு இருந்தாலும், இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான  திறந்த வாய்ப்பினை வழங்கும் அதிகாரமும் , இவற்றில் தலையீடு செய்கின்ற அல்லது செய்யாதிருக்கின்ற வல்லமை ஆட்சி அதிகாரத்திடமே உள்ளது.

இலங்கையை பொறுத்தவரை இரண்டு அதிகார, சட்டவாக்க  மையங்கள் உள்ளன. ஒன்று பாராளுமன்றம், இரண்டு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜானாதிபதி. இவை இரண்டும்   அனைத்து நாட்டு மக்களினதும் அடிப்படை ஜனநாயகம், மக்கள் உரிமைகள், பண்பாட்டு, பொருளாதார பாதுகாப்புகள் என்பவற்றை ஏதோச்சதிகாரமாக கட்டுப்படுத்தி, தமது சொந்த அதிகாரத்தினையும் நலனையும் முன்னிலப்படுத்தி, ஒரு இனத்தின், ஒரு மதத்தின், அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள், வர்க்கத்தின் பாதுகாவலனாக மட்டுமே தம்மை அடையாளப்படுத்துவது  ஏற்றுக் கொள்ள முடியாத அடிப்படை என்பதுடன், இத்தகைய ஆட்சியும் அதிகாரமும் கேள்விக்குற்படுத்த வேண்டியதுமாகும்.

இலங்கையின் இன்றைய பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி சுருக்கமாக சொன்னால் , இத்தேர்தலில் கோதபாய + மகிந்த தலைமையானது  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத , நிறைவேற்று அதிகாரத்தினை மட்டும் (ஜனாதிபதியின் அதிகாரங்கள்) கொண்டுள்ள ஒரு கட்சி , தனது இலக்கை, அதிகாரத்தினை அடைந்து, தான் நினைப்பதை எந்த தங்கு தடையும் இன்றி செய்ய , சட்டங்களை இயற்ற , அதனை நடைமுறைப்படுத்த , தமது கருத்து நிலைகளுக்கு தடையாக இருக்கின்ற சட்டங்களை நீக்க அல்லது அதில் திருத்தம் செய்ய , பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை  பலத்தினைப் பெற அனைத்து வழிகளிலும்  முயலும் ஒரு அரசியல் ஆட்டக்களம் என்றே இத்தேர்தலை குறித்துரைக்க முடியும்.

00000

2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளும்

அதன் பின்னான நிலைமைகளும்…..

இலங்கையின் இன்றைய அரசியல் களநிலவரக்  கணிப்பின்படி , கோதபாய + மகிந்த தலைமையானது  இப்பாராளுமன்றத்தேர்தலில் இத் தலைமைகளை ஆதரிக்கும் ஏனைய சிறுகட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 115 ஆசனங்கள்  தொடக்கம் அதி கூடியதாக 125 ஆசனங்களைப் பெறக்கூடிய அரசியல் சாத்தியமுள்ளது. இத் தேர்தலில் அவர்களே வெற்றி பெறுவார்கள். ஆனால் அவர்கள்  இத்தேர்தல் மூலம் எதிர்பார்க்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்களால் பெற முடியாது. உண்மையில் இத் இதேர்தல் முடுவுக்குப் பின்னான காலமும்  காய் நகர்த்தலுமே இலங்கை அரசியலில் முக்கியத்துவம் பெறப் போகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னான அரசியல் காய் நகர்த்தலும், எதிர்க்கட்சிகளின் தரப்பில் தெரிவாகப் போகும் பாராளுமன்ற பிரதி நிதிகளின் அரசியல் முடிவுகளுமே, கோதபாய + மகிந்த தலைமையின் அதிகாரத்தினையும் இலக்கையும் தீர்மானிக்கும் வல்லமையை கொண்டிருக்கப் போகிறது. இதில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை   பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் , ரணில் , சஜித் தலைமையிலான பாராளுமன்றப் பிரதிநிதிகளும் ஜேவிபியும் இருக்கப் போகிறது.  இந்த தரப்பிலுள்ள பாராளுமன்ற பிரதிநிதிகளை தம்பக்கம் இழுப்பதன் மூலம்  மட்டுமே கோதபாய + மகிந்த தலைமையால் இந்த அரசியல் பலப்பரீட்சையில் தமது இலக்கை அடந்து கொள்ள முடியும்.

2020 பாராளுமன்றத்தில் கோதபாய + மகிந்த தலைமையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை  தேர்தலுக்குப் பின்னான  அரசியல் காய் நகர்த்தல் மூலமும், பேரம்பேசல் மூலமும், பதவிகளை , பணத்தினை வழங்குவதன் மூலமும் பெற முடியாது  விட்டால் , அவர்களால் தமது திட்டங்களை, நோக்கத்தினை நிறைவேற்ற முடியாத கையறு நிலையை அடைவர். இதில் அவர்கள் வெற்றி பெற்றால்தான் நிலைமை மேலும் மோசமடைவதுடன், நாட்டின் அடிப்படை பண்புகளும் ,அதன் முகமும் மாறுவதுடன், இலங்கையின் அரசியலமைப்பே முற்றாக புது வடிவமெடுக்கும்.

உண்மையில் சொல்லப் போனால், தேர்தலுக்குப் பின்னான அரசியல் காய் நகர்த்தலில், கோதபாய + மகிந்த தலைமையின் அரசியலுக்கு எதிராக சொந்த மக்களிடம் வாக்குப் பெற்ற அரசியல் தலைமைகள், கோதபாய + மகிந்த தலைமையின் அதிகாரத்தின் முன் , சாஷ்டாங்கமாக விழுந்து   சரணாகதி அடைய முடியாதவர்களாக இருப்பது முக்கியம்.  இந்த சரணாகதி அரசியல் தமிழ், முஸ்லிம், மலையக கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் மட்டுமல்ல, ரணில் , சஜித் தலைமையில் தெரிவாகும் அரசியல் பிரதிநிதிகளிடமும் இருந்து சென்று விடக் கூடாது என்பதே எல்லாவற்றையும் விட முக்கியமானது.  

இலங்கை அரசியலில்  கட்சிகளை உடைத்து சிதைப்பது,  பதவிகளைக் கொடுத்து, வழிக்கு வராது விட்டால் பயமுறுத்தி அதன் தலைமகளை, அதன்  பாராளுமன்றப் பிரதிநிதிகளை  விலைக்கு வாங்குவது, என்பதில் கைதேர்ந்த வித்தகர்கள் இந்த மகிந்த , பசில் தரப்பினர். 2004 பாராளுமன்றத் தேர்தலில் 105 ஆசனங்களை வைத்துக் கொண்டு இந்த சான தான தண்ட பேதங்களின் வழியே ஆட்சியை உறுதிப்படுத்தி அதன் வழியாக 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியையும் விடுதலைப் புலிகளையும் வழிக்கு கொண்டு வந்து, தமது அதிகாரத்தினை உறுதிப்படுத்தியவர்கள் அவர்கள்.

எங்களப் பொறுத்தவரை, தேர்தலுக்கு பிந்திய இந்த ”இருண்ட, அதிகார, பண சூதாட்டத்தினையும், சரணாகதியை நிலையை “ இட்டுத்தான் நாம் அதிக அச்சப்படுகிறோம். ஏனெலில் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள்  தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெறுவதை தடுக்க  முடியாது. ஆனால் அவர்களது இறுதி இலக்கான பாராளுமன்றத்தில் எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் அரசியல் இலக்கை அடந்து கொள்ள எடுக்கும் எத்தனத்தினை தடுக்க முடியும். இதன் மூலம் முழு நாட்டையும்,  நாட்டு மக்களையும் சூழும் சர்வாதிகார, எதோச்சதிகாரமான இராணுவ, குடும்ப ஆட்சியை அதன் அதிகார எல்லையை, அரசியலமைப்பு திருத்தங்களை தடுக்க முடியும். ஆனால் இதற்கு இத் தேர்தலில் எதிர்க்கட்சிகளில் உள்ள அரசியல் தலைமைகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் தெளிவும், உறுதியான நிலைப்பாடும் முக்கியம். எமது அச்சமானது இந்த நிலையை இவர்கள்  உண்மையாக கொண்டிருக்கிறார்களா என்கிற இவர்களது கடந்த கால அரசியல் நடவடிக்கைகளில் இருந்து எழுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

 மொட்டுச் சின்னத்திற்கும், கோதபாயா + மகிந்தவை ஆதரிக்கும் மற்ற கட்சியினருக்கும் வாக்களிக்கும் மக்களையிட்டு நாம் இங்கு பேசவில்லை. ஆனால் இவர்களை  எதற்காகஎதிர்த்து நிற்கிறோம் என சொல்லி, சொந்த மக்களிடம் வாக்கும் பெற்று , தேர்தலின் பின் இவர்களது அதிகார வலைக்குள்  சிக்கி, முழு இலங்கையையும், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வையும் நெருப்பாற்றுக்குள் தள்ளி விடுபவர்களையும்  வாக்களிக்கும் மக்கள்  இத் தேர்தலில் தெரிவு செய்யாமல் இருத்தலே முக்கியம்.

 தெரிந்து கொண்டு கண்ணை தம் கையால் குத்துபவர்களையிட்டு நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

0000

உங்கள் கருத்துக்களை, அபிப்பிராயங்களை எழுதுங்கள். இக்கட்டுரையில் சொல்லப்பட்டவற்றில் முழுதாகவோ, பகுதியளவிலோ நீங்கள் உடன்பட்டல், இது பகிரக்கூடிய பதிவு எனக் கருதினால் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்! ( ஆ-ர்)

RSS
Follow by Email
error: Content is protected !!